நூல் மலர்: ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

1)

நிறைவாழ்வு தந்தருளும்
நிலவேந்தன் கணபதியே !
மறைபொருளாய் ஆகிநிற்கும்
பரிபூர்ண நாயகனே !
குறைகூறும் குரல்கேட்டு
கற்பகமாய்த் தருபவனே !
சிறைபட்டேன் உன்னழகில்…
சிதம்பரத்தான் திருமகனே !

2)

திருமகனே ! திருக்குமரன்
திருமணத்தை முடித்தவனே !
வருபவனே ! வரமருள..
விரைந்திட்டே வாகனம்மேல்..!
திருமுருகன் மூத்தவனே !
திருத்துருத்தி ஆண்டவனே !
பேருவகை அடைந்திட்டேன்..
பெற்றதெல்லாம் உன்னருளே !

3)

அருள் பொழியும் மேகம்நீ !
அழகு பரிபூரணனே !
பொருள் பெருக்கும் காரணனே !
போற்றுகிறேன் காத்திடுவாய் !
இருள்நீக்கி ஒளிதந்து…
இடர்விலக்கும் திருவிளக்கே !
பேருள்ளம் கொண்டவனே !
பார்காக்கும் வல்லவனே !

4)

வல்லவனே ! உன்நாம
வன்மைதனை உணர்ந்திட்டோம்..!
நல்லவர்க்கே அருள்புரிவாய் !
நன்மைகளைச் செய்திடுவாய் !
அல்லல்களை நீக்கிடுவாய் !
அகமுவந்து பாடுகிறோம்..!
வள்ளலேஉன் திருவடிகள்..
நம்பினார்க்கு துணையாகும் !

5)

துணையாகும் உன்நினைவு
தெளிந்திட்டால் அச்சமில்லை !
இணையில்லை வேறொருவர்..
இங்குனக்கு முன்நிற்க…!
வினைதீர்க்கும் நாயகனே !
வேழமுகா வந்திடுவாய் !
உனைக்கண்டேன்..எனைமறந்தேன்..
உண்மை பரிபூரணனே !

6)

பரிபூர்ண நாயகனே !
பண்புநலன் தருபவனே !
கரிமுகத்து பாலகனே !
கடைக்கண்ணால் தருபவனே !
ஹரிஹரனின் மூத்தவனே !
அவனிக்கே முதலவனே !
நெறிதவறா உன்னருளே..
நிகழ்த்திடுமே அற்புதங்கள் !

7)

அற்புதங்கள் ஆற்றிடுமே !
அருள்பொழியும் உன்கரங்கள் !
பொற்பதம் பிடித்திட்டேன்…
பரிபூர்ண நாயகனே !
நற்கதியைத் தந்திடுவாய் !
நலமருள வந்திடுவாய் !
ஏற்றமுறச் செய்திடுவாய்..
எங்கள் மணிபாலகனே !

8)

பாலகனே ! கணபதியே !
பார்போற்றும் பண்டிதனே !
நீலகண்டன் மைந்தனேநீ
நிற்கின்றாய் எம் நெஞ்சில்..!
வேலவனின் சோதரனே …
வேண்டுவரம் தந்திடுவாயே !
ஆலமரத் தெய்வமேநீ
அடியார்க்கு அமிழ்தம்தான் !