ஓரெட்டு வயதினிலே
உவந்தேற்றாய் சன்யாசம் !
ஈரெட்டு வயதுக்குள்
எழுதியதோ ஏராளம் !
மூவெட்டு வயதுக்குள்
தேசமெலாம் சஞ்சாரம் !
நாலெட்டு வயதினிலே
சேர்ந்தாயே கைலாயம் !

ஆதி சங்கரா ! – ஞான
ஜோதி சங்கரா !

உள்ளார்ந்த அன்போடு
உலர்ந்ததொரு கனிதந்த
நல்லாளாம் மூதாட்டி
அவளன்பை பாராட்டி…
கனகமழை பொழிந்திடவே
செய்தாயே அற்புதமே !
கனகதாரா தோத்திரமாய்
எமக்களித்தாய் பொக்கிஷமே !

ஆதி சங்கரா ! – ஞான
ஜோதி சங்கரா !

பித்தேறி பலவிதமாய்
பிரிந்திருந்த மனிதர்க்கு
அத்வைத பொருள்சொல்லி
அருள்வழியைச் செய்தாயே !
முத்தான உன்மொழிகள்
முப்புறவி எடுத்தாலும்
வித்தாகும் அறிவுக்கு
விருப்புடனே கேட்டாலே !

ஆதி சங்கரா ! – ஞான
ஜோதி சங்கரா !

வேதாந்தம், உபநிஷதம்
விரிவான வியாக்யானம் !
மாதாவாம் அம்பிகைமேல்
மாணிக்க தோத்திரங்கள் !
சாதாரண மனிதரைப்போல்
சகமிதனில் அவதரித்த
ஆதார சிவவடிவே…
சாஷ்டாங்க நமஸ்காரம் !

ஆதி சங்கரா ! – ஞான
ஜோதி சங்கரா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *